மிகப்பெரிய ஜனநாயாக நாடாக விளங்கும் இந்தியாவில், 17-வது பாராளுமன்ற தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்தே, வாகன சோதனை, கண்காணிப்பு என தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
முக்கிய இடங்களில் வாகனங்களைத் தணிக்கை செய்கின்றனர். உரிய ஆவணமின்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதனைப் பறிமுதல் செய்கின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும், இவ்வாறு தமிழகத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் எடுத்து செல்லும் பணத்திற்கான மூல ஆதாரம் இல்லாவிட்டால், பறிமுதல் செய்யப்படும் என்பது தேர்தல் நடத்தை விதி. இது சந்தைக்கு மாடு வாங்க ஆயிரக்கணக்கில் பணம் எடுத்து செல்லும் சுப்பனுக்கும் பொருந்தும், கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்யும் அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், இங்கே பெரு முதலாளிகள் யாரும் சிக்குவதில்லை.
கல்லாப்பெட்டி பணத்துக்கெல்லாம் ஆதாரம் கேட்பதா?
சுரண்டையைச் சேர்ந்த கடைக்காரர் மாடசாமிஇன்று (13-03-2019) நெல்லை மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் செல்லும் போது ரூ.90 ஆயிரம் எடுத்துச் செல்கிறார். அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆவணம் கேட்கின்றனர். கல்லாப் பெட்டியில் இருந்து எடுத்து வரும் பணத்திற்கு அவரால் எப்படி ஆதாரம் கொடுக்க முடியும்?
திருவாரூர் மாவட்டம் கானூர் சோதனைச் சாவடியில், வாகனத் தணிக்கையின்போது அதிமுக கொடி கட்டிச் சென்ற காரில் ரூ.50 லட்சம் பிடிபட்டது. அந்தப் பணம் பேருந்து பாடிகட்ட எடுத்து சென்றது என்றார் உரிமையாளர் சாகுல் ஹமீது. ஆனால், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதேபோல், நெல்லை, பெரம்பலூர், சேலம் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடிக்கும் மேல் சிக்கியிருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்தத் தொகை அதிகரிக்கலாம். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆதாரத்தைக் கொடுத்தால், திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆவணம் இல்லாவிட்டால் அந்தப் பணம் அரசாங்கத்திற்குத்தான்.
பணம் யாருடையது என்ற கேள்விக்கு விடை இல்லை!
2016-ஆம் ஆண்டு தேர்தலின்போது, திருப்பூரில் ரூ.570 கோடியுடன் 3 கன்டெய்னர்கள் பிடிபட்டன. அது யாருடைய பணம் என்பது இதுவரைக்கும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. மே 16-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு , மே 13-ந்தேதி திருப்பூர் அருகே பணத்துடன் சென்ற 3 கன்டெய்னர் லாரிகளை அதிகாரிகள் மடக்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த அந்த வாகனங்களில் ரூ.570 கோடி ரூபாய் இருந்தது.
அந்தப் பணம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் அப்போது பரவின. தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போய்விடுவோம் என்ற அச்சத்தில் ஜெ. அந்தப் பணத்தை கொடநாடு பங்களாவுக்கு எடுத்து சென்றார் என்றும் பேசப்பட்டது. ஆனால், பணம் பிடிபட்டு 24 மணிநேரம் கழித்து, பாரத ஸ்டேட் வங்கி, அந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடியது. கோவையில் உள்ள கிளையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய பணம் என்று வங்கி அதிகாரிகள் கூறினர். அதற்கான ஆவணம் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். ஆனால், ஆவணத்தில் இருந்த லாரியின் பதிவு எண்களும், பணம் இருந்த லாரிகளின் பதிவு எண்ணும் வெவ்வேறானவை. லாரியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் லுங்கி அணிந்து பணியில் இருந்தார்.
'ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒரு வங்கியில் இருந்து இன்னொரு மாநில வங்கிக்குப் பணப் பரிமாற்றம் நடக்கும்போது, மாவட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில எல்லையைக் கடப்பது வரையில், அவர்களது பாதுகாப்பில் பணம் இருக்கும். அதன்பிறகு, பணம் சென்று சேரும் மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பை வழங்குவார்கள். இவை எதுவுமே திருப்பூரில் பிடிபட்ட கன்ட்டெய்னர்கள் விவகாரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுத்தார் டி.கே.எஸ் இளங்கோவன்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிச்சயம் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அந்தப் பணம் யாருடையது எனத் தெரிந்துவிடும் என நம்புவோமாக!
கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள், வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். வங்கிகளில் அதிகபட்சம் பரிவர்த்தனை நடக்கிறதா? வாக்காளர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கப்படுகிறதா? என்று கண்காணிக்கின்றனர். ஆனால், புதுவையில் உள்ள அதிகாரிகளோ ஒருபடி மேலே சென்று, ஸ்விக்கி, உபேர், சோமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பைகளையும் சோதனை செய்கின்றனர். ஏற்கனவே ஆர்டர் பண்ணும் உணவில் பாதியைச் சாப்பிட்டுவிட்டுத் தான் சப்ளை செய்கிறார்கள் என்று புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் சோதனை வேறா? என வலைத் தளங்களில் நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.