சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து காத்துக்கிடக்கும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனை வரையிலும் தொடர்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதனை மருத்துவர்கள் மருத்துவ சீட்டில் எழுதிக்கொடுத்து வெளியில் வாங்கச் சொல்வதால், அந்த மருந்தை தேடி வாங்க மக்கள் தத்தளித்து வருகின்றனர். அதேபோல, இந்த மருந்தினைக் கள்ளச்சந்தையில் ரூபாய் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுவதால், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள். ஏற்கனவே இந்த மருந்துக்கு சில மாநிலங்களில் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதே சூழல் நேர்ந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுபவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, டாக்டர்கள் பரிந்துரை செய்த உரிய ஆவணங்களைக் காட்டி மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.