மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருங்குடி பகுதியில் ஏரிப்பகுதி ஒட்டிய சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பாய், பெட்ஷீட், 5 கிலோ அரிசி, ஆவின் பால் பவுடர் ஒரு கிலோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் சி.வி.கணேசன், சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.