திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சார் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது இதில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் நிக் ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நடுவன் குழுவினரும் மாநில அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்னர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக நடுவன் மாநில அரசுகள் அறிவித்தன. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகையும், பயிர் காப்பீடு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறைப்படி கணக்கெடுப்பு நடத்தி எஞ்சிய விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக சென்று கோரிக்கை மனு அளித்தும், ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து முறையிட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை புறக்கணித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து பயிர் காப்பீட்டு மற்றும் வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை சமரசம் செய்து கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுவதற்காக வந்த வட்டாட்சியர் மதிவாணனை சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர் விவசாயிகள். இதனைத் தொடர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் அளித்த உறுதியை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.