அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பரவலாக விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், 'மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. கடற்கரையோர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருவாரூர், கடலூரில் அதிக மழை பொழிந்துள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. சின்ன சின்ன இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தத் தகவலும் இல்லை. கனமழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது'' என்றார்.