Skip to main content

‘மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு’  - முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

Published on 28/07/2024 | Edited on 28/07/2024
Releasing water from Mettur Dam' Chief Minister MK Stalin  order

கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்துவதற்கும், ஏரிகள் மற்றும் கண்மாய்களில் சேமிப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.7.2024) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்று நமது விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்தது. அதே சமயம் கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதியிலுள்ள 13 மாவட்டங்களில், 5,339 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீரைக் கடைமடைக்குக் கொண்டு செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களிலுள்ள 925 முறைசார்ந்த ஏரிகளில் 8.513 டி.எம்.சி நீரினை நிரப்பும் வகையில் ஏரிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காகக் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தினை அறிவித்திருந்தார். அந்தப் பணிகளுக்காக ரூ.78.67 கோடி நிதி வழங்கி கடந்த 22-06-2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புத் தொகுப்பில் நெல் இயந்திர நடவடிக்கைக்கான ஊக்கத் தொகை, நெல் விதை விநியோகம் மற்றும் பல்வேறு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Releasing water from Mettur Dam' Chief Minister MK Stalin  order

இந்த நிலையில், மேட்டூர் அணையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.30 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கர்நாடகாவிலுள்ள 4 முக்கிய அணைகளும் நிரம்பி உபரி நீர் வினாடிக்கு சுமார் 1.48 இலட்சம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால், இந்த நீர்வரத்து மேலும் மூன்று நாட்களுக்குத் தொடரலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன சாகுபடிக்கு நீரைத் திறந்து விடுவது குறித்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரினை செம்மையாகப் பயன்படுத்தும் வகையில் இன்று (28-07-2024) மாலை 3 மணியளவில் மேட்டூர் அணை திறப்பதற்கு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். முதற்கட்டமாக, 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு, நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீர் திறந்துவிடப்படும். தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்றவாறு காவிரி நீர் திறந்துவிடப்படவுள்ளது.

Releasing water from Mettur Dam' Chief Minister MK Stalin  order

இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரைச் சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரைச் செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு  முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புகளை முன்னதாக மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், திறந்து விடப்படும் நீரைச் சேமித்து வைப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து நீர்வளத் துறையும், மாவட்ட ஆட்சியர்களும் கவனமாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுமெனவும், அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்