மணல் குவாரிகளை அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்.
அதன்படி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் இருக்குமா என நிபுணர்குழு ஆய்வு செய்த பிறகே குவாரி அமைக்க வேண்டும். மணல் குவாரிகள் காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் குவாரிகளில் இருக்கக் கூடாது. மணல் குவாரிகளின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் உட்பட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மணல் விற்பனை முழுவதும் இணையதளம் மூலமாகவே நடைபெற வேண்டும். 'TN Sand Investigator' என்ற செயலி மூலம் மணல் லாரிகளை கண்காணிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக்குழு அவ்வப்போது அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
மணல் தேவை, சப்ளை, முறைகேட்டை தடுத்தல் ஆகியவற்றுக்கு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆற்றுப் படுகைகளில் இருக்கும் மணல் குவாரிகள் கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் உறுதிச் செய்ய அறிவுறுத்தியுள்ளது. மணல் குவாரிகளால் ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் மாற்றங்களையும் மணல் குவாரி அமைப்பதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.