சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு சங்கங்களோ, மனமகிழ் மன்றங்களோ காலமுறைப்படி, மாவட்ட பதிவாளர் அல்லது சங்கப் பதிவாளர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது சங்கங்களில் சட்டவிரோதமான செயல்பாடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால், வழிமுறைகளைப் பின்பற்றி பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து பதிவாளர் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சங்கத்திலிருந்து பெறப்படும் விளக்கத்தின் அடிப்படையில் நீக்கம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கங்களின் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்குத் தெரியப்படுத்துவதோடு, அதனைச் சார்பதிவாளர் ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யலாம் என்று உத்தரவிட்டு பதிவுத்துறை அலுவலர் சிவனருள் இ.ஆ.ப., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.