வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி (52). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை மேய்ச்சலுக்காக ஆடுகளை அழைத்துக் கொண்டு விவசாய நிலங்களுக்கு சென்றுள்ளார். மாலை தனியார் விவசாய நிலத்தில் காது மற்றும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வளர்மதி கிடந்துள்ளார். மேலும் காதில் இருந்த தங்க கம்மலையும் திருடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மூதாட்டியை கொலை செய்த கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்பு பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக பேரணாம்பட்டு காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் டிஎஸ்பி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின் பெயரில் சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. பட்டப்பகலில் மூதாட்டியின் காது மற்றும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.