திருவள்ளூர் மாவட்டம், வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில், கடந்த 2002ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது அந்த கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின மக்கள் கோவிலுக்கு வழிபட விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அங்கு உள்ள மற்றொரு சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்போது கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2012ஆம் ஆண்டு கோவிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இருப்பினும், பட்டியலின மக்கள் அந்த கோவிலுக்குள் சென்று வழிபட எதிர்ப்பு நீடித்து வந்தது.
இந்த நிலையில், இந்த கோவிலில்புணரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போதும், பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கோவிலுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. இந்த சூழலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் முன்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய மாற்று சமூகத்தினர் சம்மதம் தெரிவித்தன் பேரிலும், சுமூக தீர்வு எட்டப்பட்டதன் பேரிலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கோவிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வைத்து, அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.