தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக 50க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் என்று ஏற முயன்ற நிலையில் பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதோடு, அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களை பணிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். 7:15 மணிக்குத்தான் பஸ் எடுக்க வேண்டும் என கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்பொழுது போகிறோம். பஸ்ஸை நிப்பாட்ட சொன்னாலும் எந்த பஸ் ஸ்டாப்பிலும் நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நினைக்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.