தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஏழு முக்கிய ரயில்களின் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான தகவலின்படி, மன்னார்குடி - பகத் கி கோதி (ராஜஸ்தான்) வரை செல்லும் விரைவு ரயிலில் 3 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டி குறைக்கப்பட்டு, இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்குப் பதிலாக நான்கு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்படுகிறது. இதனால் மன்னார்குடி - பகத் கி கோதி ரயிலில் இனி 11 ஏசி பெட்டிகளும், ஏழு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இருக்கும். அதேபோல் ராமேஸ்வரம் - ஒகா (குஜராத்) விரைவு ரயிலில் ஐந்து 2 ஆம் வகுப்பு பெட்டி, ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதில் 6 முதல் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். எனவே இனி ராமேஸ்வரம் - ஒகா விரைவு ரயிலில் 10 ஏசி பெட்டிகளும், 6 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.
மங்களூர் - சென்ட்ரல் லோக் மானிய திலக் (மும்பை) விரைவு ரயிலில் முன்பதிவில்லா ஒரு பெட்டி ஏசி பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது. கோவை - ராஜ் கட் (குஜராத்) விரைவு ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக நான்கு ஏசி பெட்டிகள் சேர்க்கப்படும். இதனால் இனி கோவை - ராஜ் கட் ரயிலில் 8 ஏசி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். கோவை - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதனால் இனி கோவை - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 8 ஏசி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.
அதேபோல் எழும்பூர் - ஜோத்பூர் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதில் 6 ஏசி பெட்டிகள் சேர்க்கப்படுகிறது. இதனால் இந்த ரயிலில் இனி 13 ஏசி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று பதிவு முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். சென்னை-நாகர்கோவில் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டி, ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு 6 ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட இருக்கிறது.
ஆகஸ்ட் 3 தேதி முதல் எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயிலில் 13 ஏசி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நீண்ட தூரம் செல்லும் 7 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு ரயில்வே ஊழியர்கள் சார்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் ஏசி பெட்டிகளில் பயணிக்க மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் தற்பொழுது பயணிகள் மத்தியில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில்வே பெட்டிகளில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் இம்மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.