தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.07.2024) மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்தில் 21செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நீலகிரி மாவடத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . அதன்படி 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீலகிரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை, மஞ்சூர், தோவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக பேரிடர் மீட்புப்படையினர் முகாமிட்டுள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவினரும் உரிய மீட்பு உபகரணங்களுடன் தலா 10 வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.