Skip to main content

சென்னைக்கு ரெட் அலர்ட்- கூடுதல் கவனத்தில் 180 பகுதிகள்

Published on 14/10/2024 | Edited on 14/10/2024
Red Alert for Chennai- 180 areas under extra caution

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது.

இதனால் சென்னை பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்.16 ஆம் தேதி சென்னையில் அதிக கன மழை சுமார் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நாளை மறுதினம் சென்னைக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (Red  Alert )விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather

இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை குறிப்பாக மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த காலங்களில் மழை நேரங்களில் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதன் அடிப்படையில் சுமார் 180 இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்கள் 43 இடங்களில் இணைப்பு பணிகள் முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி விரைவில் இணைப்பு பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை முடியும் வரை அவசர பணிகளைத் தவிர சாலை வெட்டும் பணிகளுக்கு அனுமதி இல்லை எனவும், 172 எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் 200 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்