தாரமங்கலம் அருகே, பழமையான பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். சிலைகளை திருடியதாகச் சாமியாரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ளூரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் பூசாரியாக உள்ளார். மே 20 ஆம் தேதி அவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, கோயிலின் வெளிக் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கோயிலுக்கு அவர் சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலின் உள் பிரகாரத்தில் இருந்த பழமையான பெருமாள் சிலை, பூதேவி சிலை 2, ஸ்ரீதேவி சிலை 2, ஆஞ்சநேயர், குழந்தை கிருஷ்ணர் சிலை ஆகிய ஏழு சிலைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இவை அனைத்தும் உலோகத்தால் ஆன ஒரு அடிக்கும் குறைவான உயரம் கொண்ட, பழமையான சிலைகள் ஆகும். இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா இனியனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கோயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், பெரிய சோரகையைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர், கோயில் பூட்டை உடைத்து சிலைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 சிலைகளையும் காவல்துறையினர் மீட்டனர்.
விசாரணையில், சக்திவேல் உள்ளூரில் காவி உடை அணிந்து கொண்டு அருள்வாக்கு கூறும் சாமியாராகச் செயல்பட்டு வந்ததும், தனது வீட்டில் பூஜை நடத்தி குறி சொல்ல வசதியாக சாமி சிலைகளைத் திருடி இருப்பதும் தெரியவந்தது. கைதான சக்திவேலை, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிலை திருட்டு நடந்த 5 நாள்களில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி., சிவக்குமார் பாராட்டினார்.