4 தசாப்தங்களுக்கு மேலாக தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள இளையராஜா, தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே அவரது வாழ்க்கை வரலாறு தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 2022ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மேலும் அவர் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமைக் கோரி வழக்கு தொடர்ந்ததன் காரணமாக விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது திரையுலகில் 48ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் இளையராஜா. இதை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் 35 நாட்களில் முழுவதுமாக எதுவும் கலக்காத சிம்பொனியை எழுதி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னைப் பற்றி தினமும் எதோ ஒரு வகையில் இது போன்ற வீடியோக்கள் நிறைய வருவதை கேள்வி படுறேன். அதில் நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் மத்தவங்களை கவனிப்பது என்னுடைய வேலையில்லை. என்னுடைய வேலையைக் கவனிப்பது தான் என்னுடைய வேலை. என்னுடைய வழியில் ரொம்ப தெளிவா சுத்தமா போய்ட்டு இருக்கேன். நீங்க என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன்.
படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டு, சில விழாக்களுக்கும் சென்று தலையை காட்டிவிட்டு வருகிறேன். இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் 35 நாட்களில் முழுவதுமாக சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். இந்தச் சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். ஃபிலிம் மியூசிக் என்பது வேறு, பிண்ணனி இசை என்பது வேறு, இது அனைத்தும் எதிரொலித்தால் அது சிம்பொனி கிடையாது. அதனால் அதை எதுவும் கலக்காத சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
pic.twitter.com/6Bkj59HOhi— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024