கடலூர் மாவட்டம், திட்டுக்குடி பகுதியில் அமைந்துள்ளது அசலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில். கடந்த 50 வருடங்களாக இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் அங்குள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசில், அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் சேகர் பாபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான பல்வேறு கோயில் நிலங்களை மீட்டுவருகிறார்.
அந்தவகையில், 50 வருடங்களாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்துவந்த அசலாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதற்கு வாழ்த்துக்களும் நன்றியயும் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்த திட்டக்குடி அருள்மிகு அசலாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 86 சென்ட் அதாவது சுமார் 40,000 சதுர அடி நிலத்தை உயர் நீதிமன்றம் வரை சென்று மீட்டெடுத்த உலக சிவனடியார் திருக்கூட்டம் உறுப்பினர் த. மாயவேல் பி.ஏ., அயன் தத்தனூரின் பெரும் முயற்சியுடனும் அவரோடு இணைந்து பணியாற்றிய திட்டக்குடி சிவஸ்ரீ க. ராஜசேகர சுவாமிகள் மற்றும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மெய்யன்பர்கள், திட்டக்குடி சிவனடியார்கள் திருக்கூட்டம் மெய்யன்பர்கள், திட்டகுடி சார்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்புடனும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதல் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒத்துழைப்புடனும், மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.