தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரண்டாம், மூன்றாம் சுற்றாக நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திறந்தவெளி அனுமதி அளிக்கும் முறையில் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி நிறுவனங்கள் இந்த அனுமதியை பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலக்கரி,மீத்தேன், ஷெல் கேஸ், ஷெல் ஆயில் என எந்த எரிபொருள் வளத்தையும் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திறந்தவெளி அனுமதி முறையை கடைபிடித்து வருகிறது. ஒற்றை அனுமதி என்பது ஒரே அனுமதியை பெற்றுக்கொண்டு ஈத்தேன் மட்டுமல்ல பூமிக்கடியில் இருக்கும் வளங்கள் எதுவானாலும் ஹைட்ரோ கார்பன் என்ற பொது பெயரில் எடுத்துக்கொள்ளலாம். திறந்தவெளி அனுமதி முறையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுற்று அனுமதியை அளித்தது மத்திய அரசு. அதில் வேதாந்தா, ஓ.என்.ஜிசி. ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தன. இந்த திட்டத்தால் மண்ணின் வளங்கள் அழிவதோடு மண்ணின் வளத்தை நம்பியுள்ள வேளாண்மை, அதனை நம்பியுள்ள விசாயிகள்,விவசாயிகளை நம்பியுள்ள மக்கள் என அனைவருக்குமே பாதிப்புதான்.
இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இரண்டு மற்றும் மூன்றாம் சுற்று அனுமதியை வழங்கியுள்ளது மத்திய அரசு என்பதுதான் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது.
இரண்டாவது சுற்றில் நாடுமுழுவதும் தமிழகம் உள்ளிட்ட 14 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்றில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் சுற்றில் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி படுக்கையில் 474.19 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது இண்டியன் ஆயில் கார்ப்ரேஷன். அனுமதி பெறப்பட்டுள்ள பரப்பு திருவாரூரில் திருத்துறைப்பூண்டி அடுத்த திருகாரவாசல் தொடங்கி வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், காரியாபட்டி என ஒரு பிரமாண்ட சதுர வடிவ மேப்பே உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாகையில் திருப்பூண்டி, காரியாப்பட்டினம், கரும்பம்புலம், திருவாரூரின் மடப்புரம் ஆகிய 4 இடங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் முதல் கட்டமாக ஆய்வு கிணறுகளை அமைக்க உள்ளது. மூன்றாம் சுற்றில் நாகை, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் 459.83 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது.
தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் நல்லநாயகிபுரம், நெம்மேலி, இவாநல்லூர், சோழசேகரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், பந்தலூர், டிமணல்மேடு, தில்லையாடி, சேஷமூலை ஆகிய இடங்களில் ஓ.என்.ஜி.சி ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, காரைக்கால் ஆகிய இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 11 இடங்களில் ஆய்வு கிணறுகளை அமைக்க உள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.
அதேபோல் திறந்தவெளி அனுமதி முறையில் ராமநாதபுரத்தில் 1,403.41 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் கருங்குடி, பெறுவயல், பெருங்கலூர், பலன்குளம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் சுற்று அனுமதிக்கே கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், வேளாண்மையை பற்றி கவலையில்லாமல் இரண்டாம், மூன்றாம் சுற்றுக்கும் மத்திய அரசு திட்டமிட்டு வருவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.