திருவண்ணாமலை நகரத்தில் செட்டித்தெருவில் இயங்கி வருகிறது மருத்துவர் சாய்பிரசன்னாவின் கிளினிக். இந்த கிளினிக் 3 கட்டிடங்களில் அருகருகே இயங்கிவருகிறது. இந்த கிளினிக்குக்குள் பிப்ரவரி 5ந் தேதி மாலை சென்ற வருமானவரித்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுப்பட்டனர்.
அந்த மருத்துவர் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தாவின் சிஷ்யை. கைராசி மருத்துவர் என பெயரெடுத்ததால் அவரது கிளினிக்கில் தாய்மார்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட மருத்துவரின் மருத்தவமனைக்குள் தான் ரெய்டு நடந்தது.
மருத்துவமனைக்கு கடந்த 6 மாதங்களாக வந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள், அவர்கள் பணம் செலுத்திய விபரம், அதற்கான ஆவணங்கள் என அனைத்தையும் அலசினர். பிப்ரவரி 6ந் தேதி விடியற்காலையே அந்த மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர். இது மருத்துவர்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கருக்கலைப்பு, கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்கிறார்கள் என திருவண்ணாமலையில் உள்ள ஸ்கேன் மையங்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது, மருத்துவர் செல்வாம்பாள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவானார், பின்னர் சில மாதங்கள் மூடியே இருந்த அந்த மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருமானவரித்துறை மருத்துவர்களை குறிவைத்து களம் இறங்கியிருப்பது திருவண்ணாமலை மருத்துவர்களை கவலையும், அதிர்ச்சியடைய வைத்துள்ளது.