18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப்பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 291 இடங்களில் பாஜக மற்றும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.
இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனும் பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பேசுகையில், ''இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நானும் ரவிக்குமாரும் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறோம்.
இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என நம்புகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு பேராதரவை நல்கி உள்ளனர் மக்கள். கடந்த முறை 55 இடங்களை கூட எட்ட முடியாத நிலையில் இருந்த காங்கிரஸ், இன்று 99 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்திருக்கிறது. அதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகளின் வெற்றி மிகப் பெரும் அளவில் கணிசமான அளவில் உயர்ந்திருக்கிறது. 230 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியை சேர்ந்தவர்கள் மக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவு உணர்த்துகிறது. அவர்களின் மதவாத அரசியல், வெறுப்பு அரசியல் தமிழ் மண்ணில் எடுபடாது. பாஜகவுக்கு துணை போகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் புறக்கணிப்போம் என்று தான் இன்று தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள். அந்த வகை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு பகுதிகளில் வெற்றி பெற்றுள்ள சூழலில் ஒரு பரிணாமம் அடைந்திருக்கிறோம். 25 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு பின்னர் விட விடுதலை சிறுத்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகங்களுக்கான கட்சி, பிற சமூகங்களுக்கு எதிரான கட்சி என்று திட்டமிட்டு சிலர் பரப்பிய அவதூறுகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைவருக்கும், ஒட்டுமொத்த தமிழர்களின் நலன்களுக்காக போராடும் இயக்கம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்த அதிகாரத்தை மக்கள் வழங்கி உள்ளனர். தேர்தல் ஆணையம் எங்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதோடு, பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகளுக்கான சின்னமாக ஒதுக்கீடு செய்யும் என்று நம்புகிறோம்'' என்றார்.