தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்த மிலானி, ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால் நான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் - பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் 76 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்பொழுதே கூட இந்த வெற்றி முறையான வெற்றி அல்ல அதிகாரத் துஷ்பிரயோகத்தால் ஓட்டு இயந்திரத்தை மாற்றி ரவீந்திரநாத் வெற்றி பெற்று இருக்கிறார் என ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட சிலரும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மிலானி என்பவர் எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுந்தர், தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு தீர்ப்பை தற்போது நிறுத்தி வைத்து இருக்கிறார்.
மிலானி
இது சம்பந்தமாக ஓ.பி.ஆர். வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மிலானியிடம் கேட்டபோது, ''ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து இருந்தேன். அதாவது வேட்புமனுத் தாக்குதலின் போது முக்கிய ஆவணங்களை மறைத்தும் சில விவரங்களைத் தவறாகவும் சொல்லியிருக்கிறார். அதுபோல் தேர்தலில் மக்களுக்குப் பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியிருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறோம். அதை வைத்து தான் ரவீந்திரன் வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்து இருந்தோம். அதன் அடிப்படையில் தான் நீதியரசரும் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது எனக் கூறியிருக்கிறார். இது எந்த பிரிவில் நீதியரசர் தீர்ப்பு வழங்கினார் என்பது தீர்ப்பு நகல் வந்த பின் தான் தெரியும். அதோடு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்திருக்கிறார். அப்படி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால் நானும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.