Skip to main content

மீண்டும் மன்னிப்பு கோரிய ஆர்.பி.வி.எஸ். மணியன்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

RBVS Manian apologized again 

 

திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகியது. இதையடுத்து ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் புகார்களும் எழுந்தன.

 

அதே சமயம் சென்னை தியாகராயர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஆர்.பி.வி.எஸ். மணியன் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் செப்டம்பர் 22 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன் தனது உடல்நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து ஜாமீன் மனு தொடர்பான விசாரணையின் போது காவல்துறை சார்பில் வாதத்தை முன்வைக்கையில், “ஆர்.பி.வி.எஸ். மணியன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தைச் சேர்ந்தவை. மேலும் மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனவும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில் ஆர்.பி.வி.எஸ். மணியனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைய இருந்தது. இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.பி.வி.எஸ். மணியன் ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்ட பலரையும் இழிவாகப் பேசியதற்காக ஆர்.பி.வி.எஸ். மணியன் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மன்னிப்பு கோரினார். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்று மீண்டும் பேசமாட்டேன் எனவும் தெரிவித்தார். உடல் நலனைக் கருத்தில் கொண்டு எனக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். இதனைக் கேட்டறிந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஆர்.பி.வி.எஸ். மணியனின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 11 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்