சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் வியபாரி ஜெகதீசன். இவரது மனைவி சிவபாக்கியம் (50). இவர் கடந்த 9ஆம் தேதி திருச்சி என்எஸ்பி ரோட்டில் உள்ள பி மங்களன்மங்கள் நகை கடைக்கு நகை வாங்குவதற்காக உறவினர்களுடன் வந்தார். அப்போது அவர் 7 பவுன் பழைய நகை 500 கிராம் வெள்ளி பொருட்கள் 81 ஆயிரம் ரொக்கப்பணம் 2 செல்போன்கள் ஆகியவற்றை தனது கைப்பையில் வைத்திருந்தார்.
அந்தப் பையை நகைக்கடை மேஜையில் வைத்துக் கொண்டு புதிய நகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ஒரு மர்மப் பெண் சிவ பாக்கியத்தின் கைப்பையை எடுத்துக்கொண்டு நைசாக தப்பிச் சென்றார்.
கொஞ்ச நேரம் கழித்து சிவபாக்கியம் புதிய நகைகளை தேர்வு செய்து கொண்டு பழைய நகை, பணம் கொண்டு வந்த தனது பையை காணாமல் திடுக்கிட்டார் அப்போதுதான் தனது அருகே நின்ற பெண் அந்த பையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைக்கடை சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, சிவ பாக்கியத்தின் பின்னால் நின்ற ஒரு பெண் அவரது நகை பணத்தை திருடிக் கொண்டு சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார் துப்பு துலக்கி அந்தப் பெண்ணை கைது செய்தனர். கைதானவர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி ஆனந்தவல்லி (47) என்பது தெரியவந்தது.
அவர் வசம் இருந்து திருட்டுப்போன 7 பவன் பழைய நகை வெள்ளிப் பொருட்கள் பணம் மீட்கப்பட்டது. இந்தப் பெண் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளன. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஜங்ஷன், துவாக்குடி போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களில் ஏறி பெண்களிடம் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.