கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பரவலாறு வழித்தடத்தில் இருக்கும் 24 கிராம ஊராட்சிகளில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை மற்றும் வெள்ள காலங்களில் அதிக நீர் வரத்தால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்க வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் இதனை நிரந்தரமாக சரி செய்யும் விதமாக அருவாமூக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்தது. ஒவ்வொரு மழைக்காலங்களில் பாதிக்கப்படுவதைக் கருதி தமிழக அரசு பல்வேறு நிதிச் சிக்கலிலும் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது. இதனை ஒட்டி கடலூர் அருகே திருச்சோபுரம் அருகே திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமைத் தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் வடிநிலைக்கோட்டை நீர்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் திட்டத்தை விளக்கி பேசி அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், “குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பரவலாறு மற்றும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் அதிக வெள்ள நீர் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பகுதி மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்தில் இந்தப் பணிகள் முடிக்கப்படும். அதேபோல் கரிவெட்டி கற்றாழை கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த பொது மக்களுக்கும் வாழ்வாதார இழப்பீட்டுத் தொகை தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இது பேச்சுவார்த்தை மூலம் கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் கொளஞ்சிநாதன் சரவணன் உதவி பொறியாளர்கள் ரமேஷ் கௌதமன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.