மாற்றுக்கட்சி பிரமுகர்கள் திமுகவுக்கு தாவுவதும் அவர்களை ஸ்டாலின் அரவணைத்துக்கொள்வதும் அறிவாலயத்தில் தொடர் நிகழ்வாகியிருக்கிறது. அந்த வரிசையில் விரைவில் திமுகவில் ஐக்கியமாகவிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்ட தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான ராயபுரம் மனோ!
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் இருந்த ராயபுரம் மனோ, கட்சியின் மாநில தலைவராக திருநாவுக்கரசு இருந்த காலக்கட்டத்தில் மாவட்டப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். கட்சி விதிகளின்படி மாவட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த அவருக்கு, மாநில பொறுப்பு வழங்கப்படும் என அவரிடமே உறுதி தந்திருந்தார் திருநாவுக்கரசு. அதற்கேற்ப கட்சியின் மாநில பொருளாளர் பதவியை எதிர்பார்த்திருந்தார் மனோ. ஆனால், அவருக்குப் பெப்பே காட்டியபடியே இருந்தார் திரு!
அதேசமயம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவி மனோவுக்கு கிடைத்தது. இந்த நிலையில், திருவின் மாநில தலைவர் பறிபோனது. புதிய தலைவராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கே.எஸ்.அழகிரியை நியமித்தார் ராகுல்காந்தி. இந்த சூழலில், சமீபகாலமாக பெரிய அளவில் எவ்வித முக்கியத்துவமும் மனோவுக்கு கிடைக்கவில்லை. கட்சியில் முக்கியத்துவம் பெற பல பேரிடம் அரசியல் செய்ய வேண்டியிருப்பதால் காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்திருக்கிறார் மனோ. தன்மானத்தை துறந்து அரசியல் செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. அரசியல் எதிர்காலம் காங்கிரசில் இருக்குமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரசிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பவும் தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் மேல் மட்டங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்து விசாரித்தபோது, ‘’காங்கிரசிலிருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறார் மனோ. விலகிய பிறகு திமுகவில் இணைவார் என தெரிகிறது. திமுக மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான சுதர்சனத்திடம் இது குறித்து பேசியுள்ளார் மனோ. சுதர்சனமும் இதனை மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
திமுக தலைமையும் இதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. அதேசமயம், திமுகவை விட பாமகவில் இணையலாம் என மனோவுக்கு சிலர் ஐடியா சொல்லியுள்ளனர். பாமகவில் இணைவதுதான் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்கிற ரீதியில் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அதனால், காங்கிரசிலிருந்து விலகி திமுகவில் இணைவாரா? பாமகவில் இணைவாரா? என்பது அடுத்த வாரத்தில் தெரியும் ‘’என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.