Skip to main content

ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Ration shops open on Sunday!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

அதில், “சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும்” என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

Ration shops open on Sunday!

இதனைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (17.12.2023) ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மேலும் ரூ. 6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைக்கிறார். 

சார்ந்த செய்திகள்