கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று (24/03/2020) மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் கடைசி நாளான இன்று (24/03/2020) பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூபாய் 3,250 கோடிக்கான நிவாரணங்களை அறிவித்தார். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரலில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும். மார்ச் மாத ரேஷன் பொருட்களைப் பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெறலாம். ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.
நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதியாக ரூபாய் 1000 மற்றும் கூடுதலாக ரூபாய் 1000 வழங்கப்படும். கட்டட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூபாய் 1,000 வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும். அம்மா உணவகங்களில் சூடான, சுகாதாரமான உணவுகள் சமைத்து வழங்கப்படும். ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக, தலா ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும். பிற மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் தரப்படும்" என்றார்.