காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 48-வது வார்டு, கணேசன் நகர் டெம்பிள் சிட்டி பகுதியில், புதிய ரேஷன் கடை வேண்டி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 48-வது மாமன்ற உறுப்பினர் கார்த்திக், தனது வார்டு மக்களின் கோரிக்கையை அப்பகுதி எம்.எல்.ஏ. சுந்தரிடம் முறையிட்டார். அதன் பெயரில் உத்திரமேரூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து, 15.78 லட்சம், ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து கட்டப்பட்ட அந்த நியாய விலை கடை, பொருட்கள் இருப்பு வைக்கும் அறை, பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அறை, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை, 24 மணி நேரக் கண்காணிப்புடன் கூடிய சிசிடிவி கேமராவுடன் கூடிய வைஃபை வசதி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக தனிவழிப்பாதை, குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு திட்டம், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு சாதனம், எதிரே பூங்கா, மேலும், கட்டிடம் முழுவதும் அனைவரும் வியக்கும் வகையில் புதுப்பொலிவுடன் வண்ணமயத்துடன், திருவள்ளுவர் உட்பட தமிழ் கலாச்சார ஓவியங்கள், திருக்குறள் மற்றும் கூட்டுறவு துறை வாசகங்கள் போன்றவற்றை எழுதி வரைந்து தமிழகத்தின் முன்மாதிரி நியாய விலை கடை எனப் பொதுமக்களால் பாராட்டப் பெற்றுள்ள இக்கடை ரூ.15.78 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியாய விலை கடையை கடந்த நவம்பர் 16ம் தேதி அத்தொகுதி எம்.எல்.ஏ சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், சமீபத்தில் இந்தக் கட்டிடத்தைப் பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.