உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.