சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஜம்பூத்துமலை கிராமத்தில் உள்ள ஓர் ஓடைப்பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 17) அரிய வகையிலான ஒரு குருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்பூத்து மலை அரசுத்தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், அடிப்படையில் ஓர் இயற்கை ஆர்வலர். அவர் கண்ணில் இந்த வித்தியாசமான குருவி தென்படவே, அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
பறவைகள் பற்றிய தரவுகள் கொண்ட இணையதளங்களில், தான் பார்த்தது என்ன வகையான குருவி என்பதை தேடி பார்த்துள்ளார். அது, இமயமலை பகுதிகளை வாழிடங்களாகக் கொண்ட டிக்கெல் பூங்குருவி இனம் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது, இமயமலை பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் அங்கிருந்து டிக்கெல் பூங்குருவிகள் கூட்டம், தென்னிந்தியாவை நோக்கி இடம் பெயர்ந்திருக்கலாம் என்கிறார் கலைச்செல்வன்.
சிட்டுக்குருவியின் அளவில் இருக்கிறது இந்த டிக்கெல் பூங்குருவி. பழுப்பு நிற அலகும், வெளிர் மஞ்சள் நிற கால்களையும் கொண்டுள்ளது இக்குருவி. ஆண் டிக்கெல் குருவி வெளிர் சாம்பல் நிறத்திலும், பெண் டிக்கெல் வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். பெண் குருவியின் மார்பு பகுதி அடர் பழுப்பு நிறத்திலும், வரிகளும் இருக்கும். ஜம்பூத்து மலைக்கிராம ஓடையில் கலைச்செல்வன் பார்த்தது, பெண் டிக்கெல் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பறவையின் பெயரிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அதாவது, இவ்வகை குருவி இனங்களை முதலில் கண்டறிந்தவர் சாமுவேல் ரிச்சர்ட் டிக்கெல் என்பவர்தான். அதனால் அவருடைய பெயரையே இவ்வகை குருவிக்கு சூட்டப்பட்டு உள்ளதாக கூறுகிறார், சேலம் பறவையியல் கழக ஆய்வாளர் கணேஷ்வர். டிக்கெல் மலர் க்கொத்தி, நீல ஈ பிடிப்பான், பழுப்பு இருவாச்சி என டிக்கெல் பெயரிட்ட இதர பறவைகளும் இருக்கின்றன.
ஜம்பூத்து மலை கிராமத்தில் சிக்கிய டிக்கெல் பூங்குருவி, இதற்குமுன் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்காடு மலைப்பகுதிகளில் முதன்முதலாக கண்டறியப்பட்டு உள்ளது. சேலம் மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இக்குருவிகளின் நடமாட்டம் குறித்து தற்போது இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 11வது முறையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கணேஷ்வர் கூறுகிறார்.