தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்குட்பட்ட சம்படி பகுதியின் தரிசுக்காட்டில் கடந்த 12ம் தேதியன்று பெண் ஒருவர் ஆடை கலைந்த நிலையில் முகம், மற்றும் தலையில் காயங்களோடு சடலமாய் கிடந்திருக்கிறார். கிடைத்த தகவலால் ஸ்பாட்டுக்கு வந்த ஏரல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ. முருகப்பெருமாள் உள்ளிட்ட போலீசார் உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். வரவழைக்கப்பட்ட தடயவியல் துறையினர் சம்பவ இடத்திலுள்ள தடயங்கள், கை ரேகைகள் போன்றவைகளைச் சேகரித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அமைத்த தனிப்படையினர், பலாத்காரமா அல்லது முன்விரோதமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் சடலமான பெண் சம்படிப் பகுதியின் செங்கமலம் (47) என்பது தெரியவந்திருக்கிறது. செங்கமலத்தின் கணவர் கணேசன் காலமாகிவிட்டார். இவர்களது 2 மகள்கள் உறவினர்களின் பொறுப்பில் வளர்கின்றனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட செங்கமலம், தன் 9 வயது மகனுடன் வசித்து வருபவர் என போலீஸ் விசாரணையில் அறியப்பட்டாலும், கொலையாளிகள் குறித்த விசாரணையில் அந்த பகுதியின் இரண்டு இளந்தாரிகள் வேலை வெட்டியில்லாமல் கஞ்சா மற்றும் டாஸ்மாக் போதையில் சின்னச்சின்ன சில்மிஷங்களில் அந்த பகுதியிலுள்ள சிலரிடம் நடந்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. சம்படியின் ஆனந்த் (34) மற்றும் மகாராஜா என்ற இரண்டு பேரை தேடியதில் அவர்கள் இடையர்காடு என்ற பகுதியிலிருப்பதையறிந்து மடக்கினர்.
விசாரணையில் வெளிப்பட்ட அவர்களின் பலாத்காரம் மற்றும் கொலை பற்றியதை வாக்கு மூலமாகவே கொடுத்திருக்கிறார்கள். அதில், “போதை பழக்கம் கொண்ட நாங்கள் செங்கமலம் வீட்டில் தனியாக இருப்பதையறிந்து கடந்த 10ம் தேதி அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்தோம். எங்களுக்கு இணங்க மறுத்த அவர் எங்களிடம் போராடினார். அவள் காட்டிக் கொடுத்து விடுவாள் என்றெண்ணிய நாங்கள், அருகில் கிடந்த செங்கலால் செங்கமலத்தின் தலை முகத்தை அடித்துக் கொன்றுவிட்டு உடலை அருகிலுள்ள புதரில் வீசி விட்டோம்.
மறுநாள் யாரும் தேடுகிறார்களா என நோட்டமிட்டதில், தேடாமல் போகவே மகாராஜா சென்னை சென்றுவிட்டான். ஆனந்த் மட்டுமே இருக்க 13ம் தேதியன்று மகாராஜா சென்னையிலிருந்து திரும்பி வந்ததும் அடுத்து என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கையில் போலீசார் வசம் சிக்கிவிட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். கஞ்சாவும் குவார்ட்டரும் சேர்ந்து நடத்திய கொலை பாதகமிது.