Skip to main content

அவர்தான் முதலமைச்சரு... பாத்துக்க... கிட்டக்கெல்லாம் போக முடியாது... பாதிக்கப்பட்டவர்களை விரட்டும் போலீஸ்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
Pudukkottai



புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்ற முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மாப்பிள்ளையார்குளம் என்ற இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். 
 

புயல் பாதித்து 5 நாள் ஆகியும் எந்த மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் அந்தப் பகுதிக்கு சென்றால உங்கள் மீதும் மக்கள் கோபத்தை காட்டுவார்கள் என்று நேற்று முதல் அமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் அதிகாரிகள், அமைச்சர்கள் தெரிவித்தனர். இதையடுத்துதான் அவர் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார்.
 

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மாப்பிள்ளையார்குளம் வரும் வழியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவித கோஷங்களும் எழுப்ப விடாமல் அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். 
 

அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் முதல் அமைச்சரை சந்திக்க வைத்து நிவாரண உதவிகளை பெற வைத்ததோடு, அவர்களிடம் மட்டும் குறைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

பாதிக்கப்பட்டவர்கள் முதல் அமைச்சரை சந்திக்க வேண்டும், கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது போலீசார், நீங்கள் அதிகாரிகள், அமைச்சர்களையே கேள்வி மேல் கேட்கிறீர்கள். முதல் அமைச்சரிடம் என்ன செய்வீர்கள் என்று தெரியாது. ஆகையால்தான் உங்களை அனுமதிக்கவில்லை. அவர்தான் முதல் அமைச்சர், இங்கிருந்தப்படியே பார்த்துக்கொள்ளுங்கள், கிட்டக்கெல்லாம் போக முடியாது. அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்