அதிமுகவில் ஜெயலலிதாவின் நன் மதிப்புக்குரிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கோகுல இந்திரா. அதன் காரணமாக 2011-2016 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர் கோகுல இந்திரா. கட்சியின் மகளிர் அணிச்செயலாளர் பொறுப்பு, ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கோகுல இந்திரா அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்து வந்த நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். அது நடக்கவில்லை. அடுத்து, அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் எதிர்பார்த்தார். அதுவும் பொய்யாகிப் போனது. தான் நினைத்த அனைத்தும் கனவாகவே போனது.
இதனிடையே கடந்த ஒரு வாரகாலமாக அதிமுகவை விட்டு வெளியேறி வேறுகட்சியில் இணையலாம். அது பாஜகவா, இல்லை திமுகவா என்று யோசித்து, திமுக என்று முடிவெடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுக சென்ற தனது அரசியல் குருவான ராஜகண்ணப்பன் மூலமாக ஸ்டாலினை சந்திக்க முடிவு செய்திருந்தார்.
இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. லண்டனில் இருந்த முதல்வருக்கு. விசயம் தெரியவர, கோகுல இந்திராவை அவர் உடனடியாக தொடர்பு கொண்டு, ’நீங்கள் ஏன் இப்படி செய்யறீங்க? என்னுடன் வந்த அனைவருக்கும் நான் தகுந்த மரியாதை கொடுத்துதான் வருகிறேன். அதில் உங்களுக்கும் உண்டு. அதற்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு வருகிற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவி உறுதி’ என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் கோகுல இந்திரா, தன் உடலில் உயிருள்ள வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார் என்கிறது அதிமுக வட்டாரம்.