ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அருகே சிப்காட் பகுதி உள்ளது. இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு மத்தியரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் ஒருப்பகுதியில் உள்ள ஒரு பாதையை, இந்த நிறுவனத்தின் அருகில் உள்ள லாலாபேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் அந்த வழியை யாரும் பயன்படுத்தா வண்ணம் சுற்றுச்சுவர் எழுப்பி வருகிறது பெல் நிறுவனம். இதனால் பொதுமக்களின் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி அக்கிராமங்களை சேர்ந்த சிலர் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, இது எங்கள் இடம், பாதுகாப்புக்காக தற்போது சுற்றுச்சுவர் கட்டுகிறோம் எனச்சொல்லியுள்ளார்கள்.
நீங்கள் இப்படி தடுத்தால், நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு செல்ல நீண்ட தொலைவு சுற்றிக்கொண்டு வந்து செல்ல வேண்டும் எனச்சொல்லியுள்ளார்கள். அதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லையாம். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள் என்ன செய்வது என யோசித்து பிப்ரவரி 19ந்தேதி லாலாபேட்டை பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ காந்தியிடம் மனு தரவும் முடிவு செய்துள்ளனர் என்கின்றனர் அக்கிராமங்களை சேர்ந்தவர்கள்.