கோவில் நிர்வாகத்தினரின் மெத்தனப் போக்கால், உணவுக்காக பூக்களை சாப்பிட்ட பசுமாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிர்லிங்களில் ஒன்றானதும், காசிக்கு நிகரானதுமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகை புரிவதுண்டு. சுற்றுலாத்தலமாகவும், ஆன்மிகத்தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் யாத்ரீகர்களின் தங்கும் வசதிக்காக தனியார் விடுதிகளும், கோவில் நிர்வாகத்தினரால் நடத்தப்பெறும் விடுதிகளும் உண்டு. இதில் ராமநாதசுவாமி திருக்கோவிலின் கிழக்கு கோபுரம் எதிரில் உள்ளது சேது இல்லம். இந்த தங்கும் விடுதியின் வாசலில் சுவாமிக்கு சாத்தப்பட்ட பூக்கள், மாலைகளை குப்பையாக கொட்டி வந்துள்ளது திருக்கோவில் நிர்வாகம். இக்குப்பையில் பூக்களை சாப்பிட வந்த பசுமாடு குப்பையின் ஊடே பாய்ந்த மின்சாரம் தாக்கி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தது. காப்பாற்ற வந்த இரு ஆட்டோ டிரைவர்களும் காயம்பட்டது தான் மிச்சம்.!
" ராமேஸ்வரம் தீவில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி உண்டு. சனிக்கிழமை 3:30 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 8:30க்கு வந்தது. அது போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இப்பொழுது வரை வரவில்லை. இதனிடையே சேது இல்லத்தில் தங்குபவர்களுக்கு தேவையான மின்சாரத்தை ஜெனரேட்டர் மூலம் வழங்கி வந்தது கோவில் நிர்வாகம். ஆனால், சேது இல்லத்தில் முறையாக "எர்த்" ராடு பதிக்கப்படாததால் மின்சாரம் பூக்குப்பையில் கசிந்திருக்கின்றது. பூக்களை சாப்பிட வந்த பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது. காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பசு மாட்டிற்கு ஏற்பட்ட நிலை மனிதனுக்கு வந்திருந்தால்..? நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கின்றது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தாலே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது." என்கின்றனர் அங்குள்ள பொதுமக்கள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.