தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த மீனவர் சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (18.02.2024) முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதியில் இருந்து மீனவர்கள் நடைப்பயணமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.