தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன்தினம் அதிர்ச்சி தரும் விதமாக 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களிடமிருந்து விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் பாம்பன் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டுப்படகு விசைப்படகு என எந்த பேதமும் இல்லாமல் மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஒன்று கூடியுள்ளனர். கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறையில் அடைத்து நீதிமன்ற காவல் முடிந்து விடுதலை செய்யும் பட்சத்தில் ஒரு கோடி ரூபாய் முதல் மூன்று கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதோடு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் அரசுடைமையாக்கி வருகிறது.
கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் படகுகள் விடுவிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது படகுகளை இலங்கை அரசே தன்னுடைய உடைமையாக்கிக் கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ.டி.எஸ்.பி காந்தி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.