ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பச்சைப் பசேலென பாசிகள் படர்ந்தப் பாறைகளும், சிவலிங்கங்களும் கண்ணில் தென்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அவ்வவ்ப்போது கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்று. ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடற்கரை பகுதி மற்றும் சங்குமால் பகுதிகளில் கடல் வழக்கம்போல் இருந்த நிலையில் காலை 10.00 மணியளவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திடீரென கடல் நீர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
இதனால் கடலுக்கு அடியிலிருந்த பாசி படர்ந்த பாறைகள், கடல் புற்கள் இவைகளால் கடற்பரப்பு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்க, பக்தர்களால் கடலுக்குள் விட்டுச் செல்லப்பட்ட சிவலிங்கங்களும் தண்ணீர் இன்றி தெளிவாகத் தெரிந்தது. இதே வேளையில், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சில நாட்டுப் படகுகள் தண்ணீரின்றி தரைதட்டி நின்றது வித்தியாசமான காட்சியாகப் பதிவாகியது.