வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் காலையில் பெய்த கனமழையினால் பெருமளவில் காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையாக வெயிலின் தாக்கமும், அனல்காற்றும் வீசி வந்ததால் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் வெளியில் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதேவேளையில், தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணாமாக தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பொழியும் என வானிலை மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது.
அதுபோல், ராமேஸ்வரத்தில் இன்று (12/05/2020) காலை 06:45 மணிக்கு துவங்கிய லேசான மழை சிறிது நேரத்தில் கடும் இடி மின்னலுடன் பலத்த மழையாக மாறி ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதுடன் தற்காலிகமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கியதால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து காய்கறிகளும் மழைநீரில் மிதந்தது பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இது போல் மீன் மார்க்கெட்டிலும் இந்த நிலை ஏற்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு பக்கம் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் திடீரென பெய்த மழையின் காரணமாக கடும் வெப்பம் குறைந்து தீவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.