பட்டியலின சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் தர்மபுரி நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ளது கீரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் யோகேஸ்வரன் என்பவர் 'யோகேஷ் பியூட்டி சலூன்' என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருகறார். இந்த நிலையில் அவருடைய கடைக்கு 17 வயது சிறுவன் ஒருவன் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது சிறுவனிடம் ஊரை விசாரித்த யோகேஷ் சிறுவனுக்கு முடி திருத்தும் செய்ய மறுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் யோகேஸ்வரனின் தந்தையும் அந்த பகுதிக்கு வந்து அச்சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி இது குறித்து சலூன் கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினர். அப்பொழுது பட்டியலின மக்களுக்கு காலம் காலமாக நாங்கள் முடி திருத்தம் செய்ய மாட்டோம் எனக் கூறினர். உடனடியாக சிறுவனின் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு யோகேஸ்வரன் மற்றும் அவருடைய தந்தை சென்னையன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.