ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி (31.07.2024) அதிகாலையில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் படகு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான கார்த்திகேயன் என்பவரது விசைப் படகு மீது மோதியுள்ளது.
அப்போது அந்த படகில் இருந்த முத்து முனியாண்டி, ராமச்சந்திரன், மூக்கையா, மலைச்சாமி உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகினர். இதில் மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இந்த விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த மூக்கையன், முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மற்றொரு மீனவரான ராமச்சந்திரனைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்திற்குத் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. உயிரிழந்த மீனவரின் உடலைத் தமிழகம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் இந்தியக் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று (03.08.2024) அதிகாலை 4 மணியளவில் மலைச்சாமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் விடுவித்தனர். கடலில் மூழ்கிய ராமச்சந்திரனைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.