திருபுவனத்தில் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் " என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப்பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கடந்த ஐந்தாம் தேதி கொலை செய்யப்பட்டார். அதனால் அந்த பகுதியே கலவரமாக மூளும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் சிந்தனைச்செல்வன் வந்திருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், "திருபுவனத்தில் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை குற்றவாளிகள் மீது தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்திவருவது கொலை வழக்கின் போக்கை திசை திருப்புகிற செயலாக உள்ளது. ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்பில்லாதவர்கள், அரசியல் நிர்பந்தம் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய போக்கு, வழக்கின் விசாரணையைத் திசை திருப்புவதற்கான செயல். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்." என்றார்.