Skip to main content

ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேர்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Ramajayam case; 12 in the fact-finding test

 

திமுகவின் முதன்மைச் செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி விடியற்காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

 

அவரது உடல் திருவளர்ச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களுக்கு வலை வீசி தேடி வந்தனர். இந்த வழக்கு உள்ளூர் காவல்துறையில் தொடங்கி சிபிசிஐடி, சிபிஐ என்று பலரது கைமாறிச் சென்றும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையிலேயே இருந்தது.

 

தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்றம் இதற்கென சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எஸ்.பி ஜெயக்குமார், டி.எஸ்.பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர்  அடங்கிய சிறப்பு தனிப்படை புலனாய்வு குழுவினர் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

 

மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்குள் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், இவ்வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 12 ரவுடிகளின் பட்டியலை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

 

இதன்படி, தமிழகத்தின் பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ்,  திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்