Skip to main content

‘தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது’ - ராமதாஸ் கண்டனம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ramadoss condemned TN govt has shown negligence in providing quality higher education

அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்; அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை  எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர். ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டு, அதற்கான அறிவிக்கையை வெளியிடாமல் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஏமாற்றுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4000 உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. நடப்பாண்டிலும் அறிவிக்கை வரவில்லை.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 75% ஆகும். இவ்வளவு காலியிடங்களை வைத்துக் கொண்டு அரசுக் கல்லூரிகளில் தரமான உயர்கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த அளவுக்கு காலியிடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்ப தமிழக அரசால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,331 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது; அதேபோல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது; ஆனால், இரு நடைமுறைகளும் பாதியில் நிறுத்தப்பட்டதால் புதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 11 ஆண்டுகளில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும் ஆசிரியர்களை நியமிப்பதில்  தேவையற்ற தாமதம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையில் கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் அரசு கல்வி நிறுவனங்களில் கல்வித்தரம் சரி செய்ய முடியாத அளவுக்கு சீரழிந்து விடும்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 2019&20 ஆம் ஆண்டில் 51.4% ஆக இருந்தது. அது 2020&21 ஆம் ஆண்டில் 46.9% ஆக குறைந்துவிட்டது. இதற்குக் காரணம் அரசு கல்லூரிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாதது தான். இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை உத்தர்காண்ட், கேரளம் ஆகிய மாநிலங்கள் பின்னுக்குத் தள்ளிவிடும் வாய்ப்புகள் இருப்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும்  தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.