Skip to main content

வ.உ.சி. பெயரில் விருது, அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் - ராமதாஸ் வரவேற்பு!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

Ramadoss appreciates  MK Stalin's announcement

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கப்பகோட்டிய தமிழர் வ.உ.சி. பெயரில் விருதுகள் வழங்கப்படும், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை இன்று (03.09.2021) வெளியிட்டார். இதனை வரவேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி அவரது பெயரில் விருது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும், தமிழறிஞர், மருத்துவர் என பன்முகத் தன்மை கொண்ட அயோத்திதாச பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டு உள்ளார். இரு தலைவர்களையும் பெருமைப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவரும், ஆங்கிலேயர்களால் மிகக் கொடிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவரும் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான். ஆங்கிலேயர்களின் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் அழித்து அவர்களை இந்தியாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி ஆங்கிலேயர்களை மிரள வைத்தவர். ஆங்கிலேயர்களின்  சதித் திட்டங்களாலும், ஒடுக்குமுறையாலும் தமது சொத்துகளையெல்லாம் இழந்து பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்குக் கூட பண வசதியில்லாமல் வறுமையில் வாடியவர்.

 

வ.உ. சிதம்பரம் பிள்ளை, இந்த நாட்டுக்காக செய்த தியாகங்களுக்காக அவருக்கு நாம் உரிய அங்கீகாரத்தையும், நன்றிக்கடனையும் செலுத்தவில்லை; அந்தக் குறையை தமிழக அரசு போக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு, நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், அதை ஓராண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்; அவருக்கு உருவச்சிலை, பல்கலைக்கழகம் மற்றும் கப்பலுக்கு அவரது பெயரை சூட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாள், விடுதலை நாளையொட்டி வெளியிட்ட அறிக்கையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியிருந்தேன்.

 

இத்தகைய சூழலில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளையை போற்றும் மக்கள் அனைவருக்கும் இது ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.

 

அதேபோல், அயோத்திதாச பண்டிதரின் 175-ஆவது பிறந்தநாளை போற்றும் வகையில் அவருக்கு வட சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பும் அவரையும், தமிழையும் போற்றும் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை அளிக்கும். அயோத்திதாச பண்டிதருக்கு பெருமை செய்ததில் முன்னோடிக் கட்சி என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை தாம்பரத்தில் அமைக்கப்பட்ட தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு அயோத்திதாச பண்டிதரின் பெயரைச் சூட்டியும், அந்த வளாகத்தில் அயோத்திதாச பண்டிதரின் உருவச்சிலையை அமைத்தும் பெருமைப்படுத்தினார். இப்போது கூடுதல் சிறப்பாக மணிமண்டபம் அமைக்கப்படுவது அயோத்திதாச பண்டிதருக்கு பெருமை சேர்க்கும்.

 

வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறும், அயோத்திதாச பண்டிதரின் வரலாறும் தமிழ்ச் சமுதாயம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள் ஆகும். அந்த வகையில் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ஆவது ஆண்டு விழாவை நாளை மறுநாள் தொடங்கி ஓராண்டுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அயோத்திதாச பண்டிதரின் 175ஆவது ஆண்டு நிறைவடைந்துவிட்டாலும் கூட அதையும் கொண்டாட அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்