ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி வரலாறு காணாத அளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் வெங்காய விலை விண்ணைத் தொட்டுள்ளது. இந்நிலையில் வெங்காய விலை உயர்வு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "சென்னை கோயம்பேடு சந்தையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை விலைக் கடைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அவற்றையும் தாண்டி வெங்காய விலை உச்சத்தை நெருங்குவது மிகவும் கவலையளிக்கிறது.
வெங்காயத்தின் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெங்காயப் பயன்பாட்டை குறைக்க முடியாது என்பதால், மக்களின் மாதாந்திர செலவு அதிகரித்து விட்டது. உணவகங்களில் வெங்காயத்திற்கு மாற்றாக வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் உணவகங்களில் உணவுகளின் விலைகள் உயர்த்தப்படும் ஆபத்தும் உள்ளது.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் வெங்காய கையிருப்புக்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. வெங்காயத்தின் தேவைக்கு இணையாக வெங்காயத்தின் வரவை அதிகரிப்பதன் மூலமாக மட்டும் தான் விலையை கட்டுப்படுத்த முடியும்.
எகிப்து நாட்டிலிருந்து ஒன்றரை லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று கடந்த மாதமே மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும், பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்வதற்காக நடைமுறை மிகவும் நீளமானது என்பதால், இன்று வரை எகிப்து வெங்காயம் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை. டிசம்பர் மாத மத்தியில் தான் வெளிநாட்டு வெங்காயம் இந்தியா வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
அதுவரை பொறுத்திருந்தால் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.150 தாண்டிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, கொள்முதல் விதிகளை தளர்த்தியாவது வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயத்தின் தேவை - வரவு இடைவெளியை குறைப்பது ஒருபுறமிருக்க, விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தான் விலையை குறைக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.