
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்-ன் அரசியல் பிஏ வாக உள்ளவர் கலைச்செல்வன் (56). சென்னையிலிருந்து மதுரை சென்றவர் திடீரென பயணதிட்டத்தை மாற்றி வழக்கறிஞர் சூரியபாண்டியன், ராணிபத்மினி ஆகியோருடன் நேற்று 19ந் தேதி மாலை மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் இரு அறைகளில் தங்கியுள்ளனர்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சென்றவர்கள் இன்று தென்றல் அலங்கார ஜீயரை சந்திக்க வேண்டும் என்றனர். ஆனால் ஜீயர் ஊரில் இல்லை தொடர்ந்து முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத்குமாரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி வந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கலைச்செல்வன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து மன்னார்குடி டிஎஸ்பி அசோகன் நடத்திய விசாரணையில் சூரியபாண்டியன் கூறும் போது.. கலைச்செல்வன் எங்கள் உறவினர். எங்களுடன் வந்துள்ள ராணி பத்மினி என் தங்கை கோயிலுக்கு வந்தோம். ஒரு வழக்கு சம்மந்தமாக வழக்கறிஞரை சந்திக்க இருந்த நேரத்தில் தான் இப்படி நடந்துவிட்டது என கூறியுள்ளார். ஆனால் அவரது பதிலால் போலீசார் திருப்தி இன்றி உள்ளனர்.
மேலும் ராஜ்நாத்சிங் பிஏ என்று வெளியே சொல்ல வேண்டாம் என்றும் பாஜக பிரமுகர் என்று வெளியே சொல்லவும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.