நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களை கைதுசெய்ய கோரி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். புதுச்சேரி கல்வித்துறையின் முன்னாள் அமைச்சரான இவர் புதுச்சேரி உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கந்தசாமியை நேற்று மாலை ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆணையர் கந்தசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்யாணசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவுசெய்து, கைது செய்ய வலியுறுத்தி உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று தங்களுடைய பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக உழவர்கரை நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் எடுக்கும் பணிகள், துப்புரவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தனக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்யாணசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஆணையர் கந்தசாமி ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், மற்றும் அவரது ஆதரவாளர்கள் செந்தில், பொறையூர் பாஸ்கர் ஆகிய 3 பேர் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் அதேசமயம் அவர்களை கைது செய்யும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.