தமிழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாம்களில் 2663 பேருக்கு ஹெச்3என்2 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு உடலில் தீக்காயம் அடைந்து சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் 6 அறுவை சிகிச்சைகளுக்குப் பின் பூரண உடல்நலத்துடன் முழுமையாக குணமடைந்தார். சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “2021 ஏப்ரல் 15 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் சத்திய ஜோதி தம்பதியின் 10 வயது சிறுவன் சூர்யகுமார் சானிடைசர் கோப்பை ஒன்றை கையில் வைத்திருந்த போது தவறுதலாக நெருப்பில் விழுந்தது. இதனால் கோப்பை வெடித்ததில் சிறுவனின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் காயங்கள் குணமாகவில்லை. சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய்களும் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்த சிறுவனின் தாயார் சிறுவனை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மனு கொடுத்துள்ளார். இதை நான் கண்டவுடன் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரச் செய்தோம். மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்தனர். கடந்த ஒரு வருடத்தில் ஆறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுவனை பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர். இன்று சிறுவனின் குடும்பத்தார் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. 2 என்ற நிலையில் இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் இந்த பாதிப்பு பெருகிக் கொண்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 500 என்ற அளவில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்களில் 2663 காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஹெச்3என்2 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் இந்தியாவிலேயே இரண்டு பேர். திருச்சியில் உயிரிழந்த இளைஞர் மரணம் ஹெச்3என்2 என்று உறுதி செய்யப்படவில்லை. எனவே தான், அவரது மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஆய்வுக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவந்த உடன் மரணம் நேர்ந்தது எப்படி என்பதை தெரிவிப்போம்.
இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தனிமைப்படுத்திக்கொள்ள சொல்வதே கூடுதலாக பரவக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் அவர்களை சமுதாயம் புறந்தள்ளப் போவது இல்லை. அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூட வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை விடுக்கிறோம். ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.