கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன. அது மட்டும் இல்லாமல் பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்பும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் ரஜினி பேசியதாக பல காவல்நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்கு தொடரப்பட்டது.
மேலும் பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியார் இயக்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் "இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாகவும் எதையும் நான் தெரிவிக்கவில்லை. மற்றவர்கள் கூறியது பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன். அதனால் மன்னிப்புகேட்க முடியாது" என தெரிவித்தார்.
இதையடுத்து பெரியார் ஆதரவாளர்கள் சிலர் ரஜினி வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த பெரியார் ஆதரவாளர்கள் சிலர், "ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது. இந்த போராட்டம் இதோடு நிற்காது" என்று தெரிவித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் ரஜினி ரசிகர்கள், இவ்வாறு பேசியவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.